கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்.
கோவை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பை ஏற்று கொள்கிறார்.
இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு பதக்கங்களை கலெக்டர் கிராந்தி குமார் வழங்குகிறார்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த விழாவில் காந்திமாநகர் அரசு பள்ளி, அரசூர் அரசு பள்ளி உள்பட 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு வ.உ.சி. மைதானத்தில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி, மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இது தவிர போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்த குமார் நாளை காலை 9.10 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் ஆணையாளர் பிரதாப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதேபோன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு, ரெயில் நிலையம், பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை கடைகளில் தேசிய கொடி விற்பனை சூடு பிடித்து உள்ளது.