அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்


அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும்   கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்களுக்கான திட்டம் சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சமூகநலன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சி நிலையை வயது வாரியாக ஆய்வு செய்ததில், காணை, கோலியனூர், மயிலம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய வட்டாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். அதுபோல் கர்ப்பிணி பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை குறித்த ஆய்வில் மரக்காணம் வட்டாரத்தில் ரத்தசோகை உடைய கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

ஊட்டச்சத்து தோட்டம்

மேலும் கலெக்டர் மோகன் கூறுகையில், அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பான சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழ் நிலையில் முன்பருவ கல்வி பயில ஏதுவாக மையங்கள் இருத்தல் வேண்டும். அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க இடவசதி உள்ள அனைத்து மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும். ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் மருத்துவ பரிந்துரை செய்த அனைத்து குழந்தைகளையும் TNICDS APP என்ற செயலியில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story