பொதுமக்களுக்கு சுகாதாரமானகுடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


பொதுமக்களுக்கு சுகாதாரமானகுடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல்லில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள வீடுகள், குடிநீர் தொட்டிகள், குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட விவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். தங்கள் ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையிலும், பொதுமக்களிடம் நன்மதிப்பு கிடைக்கப்பெறும் வகையிலும் செயல்பட வேண்டும்.

சுகாதாரமான குடிநீர்

பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதன் முழு விவரங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவைபடாத இடங்களில் தெருவிளக்கு, செயல்படாத ஆழ்துளை கிணறு ஆகியவற்றின் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டித்து தேவையற்ற செலவினங்களை குறைத்திட வேண்டும்.

எந்தவொரு திட்டத்திற்காகவும் இடத்தை தேர்வு செய்யும் போது ஊராட்சிக்கு சொந்தமான இடமாக அல்லது வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தனிநபர் இடமாக இருந்தால் முறையான அனுமதி பெற்று பணிகளை தொடங்கிட வேண்டும். இதுவரை பணிகள் எடுக்கப்பட்டு முடிக்காமல் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கிராமசபை கூட்டம்

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், குடியரசு தினம் மற்றும் கிராம சபை கூட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story