விதிமீறல் கட்டிடத்தை இடிக்க கலெக்டர் உத்தரவு


விதிமீறல் கட்டிடத்தை இடிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2023 2:30 AM IST (Updated: 14 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

காட்டேரியில் விதிகளைமீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

நீலகிரி

குன்னூர்

காட்டேரியில் விதிகளைமீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

விதிமீறல்

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக இருப்பதாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் மாஸ்டர் பிளான் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது. நீர்நிலைகளை ஒட்டி கட்டிடம் கட்ட அனுமதி இல்லை. வீட்டிற்கு அனுமதி பெற்று விட்டு வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால், சிலர் விதிகளை மீறி கட்டிடம் கட்டி வருகின்றனர்.

குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் 40 வீடுகள் உள்ளன. இந்த பகுதி நிலச்சரிவு ஏற்படக்கூடும் அபாயகரமான இடமாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை காலி செய்யுமாறு சமீபத்தில் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

இதற்கிடையே அந்த பகுதியில் அனுமதி இன்றி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குன்னூர் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அமைச்சர் ஆய்வு

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, கட்டிடம் கட்டுவதை தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் காட்டேரி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள், ஏழை மக்களாகிய நாங்கள் வீடு கட்டினால் அனுமதி இல்லை என்று கூறி கட்டிடம் இடிக்கப்படுகிறது. ஆனால், வசதி படைத்தவர்கள் விதிகளை மீறி கட்டிடம் கட்டினால் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

மழைக்காலம் தொடங்கி விட்டதால், விதிமீறிய கட்டிடத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றனர். இதையடுத்து அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நகராட்சி மூலம் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விதிமீறிய கட்டிடத்தை 2 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜூக்கு கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.


Next Story