பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை; கலெக்டர் விசாகன் உத்தரவு


பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை; கலெக்டர் விசாகன் உத்தரவு
x

ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

திண்டுக்கல்

ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

ஜமாபந்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் இன்று வருவாய் ஜமாபந்தி நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திலும் வருவாய் ஜமாபந்தி நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மேலும் ஜமாபந்திக்கு சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் வந்து இருக்கிறார்களா? என்று விசாரித்தார்.

அதேபோல் நிலஅளவை தொடர்பான உபகரணங்களை ஆய்வு செய்தார். இதையடுத்து ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களை கலெக்டர் பெற்றார். அப்போது குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, கொத்தப்புள்ளி, சி்லவார்பட்டி, அழகுபட்டி, கே.புதுக்கோட்டை, குருநாதநாயக்கனூர், சுள்ளெறும்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர். அதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாரிசு சான்றிதழ் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனு கொடுத்தனர்.

எச்சரிக்கை

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் விசாகன், அவற்றை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார். மேலும் 8 பேரின் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதில் நிலஅளவை உதவி இயக்குனர் சசிக்குமார், தாசில்தார் ரமேஷ்பாபு, தனிதாசில்தார் மீனாதேவி, தலைமையிடத்து துணை தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, தாசில்தார்கள் முத்துராமன், சந்திரன் உள்பட வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.


Related Tags :
Next Story