கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சி.பழனி தேசிய கொடி ஏற்றி வைத்து ஏழைகளுக்கு ரூ.25¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்

சுதந்திர தின விழா

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் சி.பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண, வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்ட அவர் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாயுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர், சாரண, சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் பின்னர் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்கள் 218 பேருக்கு நற்சான்றிதழை வழங்கிய கலெக்டர் சி.பழனி தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25 லட்சத்து 37 ஆயிரத்து 246 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

விழாவையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்பம், சிலம்பம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி கிளாரிபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் செயிண்ட் ஜோசப் குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத் தினர்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஜியாவுல்ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், தாட்கோ மாவட்ட மேலாளர் தமிழரசன், உதவி கலெக்டர்(பயிற்சி) லாவண்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கலெக்டர் சி.பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story