மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இம்முகாமில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் மூலமாக மாற்றுத்திறன் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து 40 சதவீதத்திற்கு மேல் உடற்குறைபாடு இருப்பவர்கள் கண்டறியப்பட்டனர். அதன்படி 74 மாற்றுத்திறனாளிகள் தகுதியானோர் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு வயது தளர்வு குழு ஒப்புதலின்பேரில் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு அவர்கள், சமூகத்தில் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு வழிவகை ஏற்படும் என்றார்.
இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, டாக்டர்கள் சம்பத், லலிதாசெழியன், மோனிஷா, காமேஷ், கதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.