'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்


எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 பள்ளிகளில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின்கீழ் பள்ளித்தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு உறுதிமொழியை வாசிக்க மாணவ- மாணவிகள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது:-

பள்ளிகள்தோறும் தூய்மை கடைபிடிக்கப்பட்டால்தான் மாணவ- மாணவிகள் முழு சுகாதாரத்துடனும், ஆரோக்கியத்துடனும் கல்வி பயில முடியும் என்ற நோக்கில் மாணவர்களிடையே பள்ளிகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1,295 பள்ளிகளில்

இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பள்ளியை சுத்தமாக வைத்தல், மாணவர்கள் தன் சுத்தம், பசுமை வளாகம், காய்கறி தோட்டம் அமைத்தல், நெகிழி இல்லா பள்ளி வளாகம், மறுசுழற்சி போன்ற நடவடிக்கைகள் மூலம் பள்ளியை மிளிரும் பள்ளியாக மாற்றுவதாகும். தூய்மையான பள்ளி வளாக உறுதிமொழி ஒவ்வொரு வாரத்தில் முதல்நாள் அனைத்து அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டு வைத்து, பள்ளி வளாகம், வகுப்பறை, சமையற்கூடம், விளையாட்டு மைதானம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், பள்ளி தலைமைஆசிரியர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story