ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை ராமநாதபுரம் பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் கிராந்திகுமார் திடீரென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை ராமநாதபுரம் பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் கிராந்திகுமார் திடீரென்று ஆய்வு செய்தார்.

சேவை மையம்

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-

மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குறைபாடு, அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு, கோணக்கால்கள், பிறவிக்கண்புரை, பிறவிக்காது கேளாமை, பிறவி இருதய நோய்கள், மாறுகண், தலசீமியா, ரத்தசோகை, வைட்டமின் ஏ மற்றும் டி குறைபாடு, புரதச்சத்து குறைபாடு, அயோடின் குறைபாடு, தோல்வியாதிகள், காதில் புண், சீழ் வடிதல், ருமாட்டிக் இருதய நோய், பல்சொத்தை, வலிப்பு நோய், கண் பார்வை கோளாறு, காது கேட்பதில் கோளாறு, அறிவாற்றல் மற்றும் மொழி தாமதம், கற்றல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

புறநோயாளிகள்

இந்த மையத்தில் 2022-23 ஆண்டில் 15 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளில் 107 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 92 பேருக்கு அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு அறுவை சிகிச்சையும், ஆட்டிசம் சிகிச்சை 102 குழந்தைகளுக்கும், 450 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் முத்துராமலிங்கம் வீதி ரேஷன் கடை, பாரதிநகர் 6 வீதி ரேஷன் கடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கார்டு தாரர்களுக்கு வினியோகிக்கப்பட்ட பொருட்களின் விவரம், இருப்பு விவரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் ரேஷன் கார்டுதார்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் கலெக்டர் கிராந்திகுமார், விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அறை, மார்பக பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வகம், பிரசவ வார்டு உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்ததுடன், அங்கு கர்ப்பிணி மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், சுகாதார துறை துணை இயக்குனர் அருணா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story