கோவையில் கலெக்டர் சமீரன் தேசியக்கொடி ஏற்றினார்
கோவையில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் சமீரன் தேசியக்கொடியேற்றினார்.
கோவை
கோவையில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் சமீரன் தேசியக்கொடியேற்றினார்.
75-வது சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.
தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 66 பேருக்கும், அரசு டாக்டர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட விளையாட்டு துறை, தென்னை ஆராய்ச்சி மையம், கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மாவட்ட ஆலோசனை மையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய 176 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கிணத்துக்கடவு ஊராட்சிக்கு விருது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட முன்மாதிரி கிராம விருது கேடயம் மற்றும் ரூ.7.5 லட்சம் பரிசு தொகையை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் பெற்றது. சுதந்திர தினவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறுவர், சிறுமிகள் சாகசம் செய்தனர். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், 75-வது சுதந்திர தினவிழாவை யொட்டி கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிலர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.