அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் வந்து சென்று கல்லூரியில் படிக்க முடியாததாலும், போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதாலும் தற்போது வாடகைக்கு அறை எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வருகிறோம். ஆனால் சாப்பாடு செலவு, அறை வாடகை அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.