அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

சேந்தமங்கலம் அருகே உள்ள மேலப்பட்டி அரசு பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டியில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டி, கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பள்ளி வகுப்பறை ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேலப்பட்டி குட்டையை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூர்வாரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து, மேலப்பட்டி அருந்ததியர் காலனி குடியிருப்பு பகுதி பொதுமக்களிடம் தங்களது வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்து பணிகள் மற்றும் குறைகள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

அடிப்படை வசதிகள்

இந்த ஆய்வின் போது தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், தெருவிளக்கு வசதி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், பட்டா இல்லாத நபர்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story