மனிதநேயத்தை கடைபிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும்-கலெக்டர் பேச்சு


மனிதநேயத்தை கடைபிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும்-கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
சிவகங்கை

மனிதநேயத்தை கடைபிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

மனிதநேய வார நிறைவு விழா

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழா 10 நாட்கள் நடைபெற்றது. அதன் நிறைவு விழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் பேசியதாவது:-

மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடைபிடித்தால், சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து, மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் விதமாக தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் முன்வர வேண்டும். எவ்விதப்பாகுபாடின்றியும், எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் எண்ணம்தான் மனித நேயத்திற்கு அடிப்படையாக திகழும். அதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தும்விதமாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தல் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீருதவித்தொகையாக 58 பயனாளிகளுக்கு ரூ.33.65 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகளையும் மற்றும் 8 பயனாளிகளுக்கு ரூ.17.51 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் பள்ளிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி, மாறுவேடபோட்டி, தனித்திறன்போட்டிகள், மவுன நடிப்பு போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்ற 69 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், அரசு வக்கீல் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன் ஆறுமுகம், பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story