நாமக்கல்லில் சுதந்திர தினவிழா:கலெக்டர் உமா தேசியக்கொடியை ஏற்றினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் 36 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
சுதந்திர தினவிழா
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் உமா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர். மேலும் சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்தம் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 16 ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல்துறை பேண்டு வாத்தியக்குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்டபல்வேறு துறைகளின் சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 35 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகள்
விழாவையொட்டி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் ஆர்.சி தூய இருதய தொடக்கப்பள்ளி என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இவ்விழாவில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் சரவணன், கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.