வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
x

நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நலவாழ்வு மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அவர் பள்ளிப்பாளையம் நகராட்சி அமுதம் விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு டோக்கன் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவ பிரிவு, புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

சாலை அமைக்கும் பணி

மேலும் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குமரன் நகர் ஓடையில் களியனூர் மற்றும் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்கும் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் தட்டாங்குட்டை ஊராட்சியில் ஒப்பளிக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் கீழ் எளையம்பாளையம் மயானம் முதல் பாறைக்காடு வரை சாலை அமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புறவழிச்சாலை

முன்னதாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம், மரூர்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாமக்கல் புறவழிச்சாலை அமைய உள்ளதையொட்டி தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தாமரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story