வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
ராசிபுரம் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம்
வளர்ச்சி திட்ட பணிகள்
ராசிபுரம் நகராட்சி, மலையாம்பட்டி ஊராட்சி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதையொட்டி ராசிபுரம் நகராட்சி பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை, நீர் சுத்திகரிப்பு மையம், சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கையாளும் முறைகள், குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், நெகிழி உள்ளிட்ட மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
கலெக்டா் ஆய்வு
நாமகிரிப்பேட்டை வேளாண் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கணித வாய்ப்பாடு வாசிக்க சொல்லி கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி ஆணையாளர் சுபாசினி, ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம் மற்றும் மேகலா, வேளாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.