மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
மாநகராட்சி பள்ளியில் ஆய்வு
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள கோடையிடி குப்புசாமி முதலியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியை பேபியிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் பழுதடைந்த தரைத்தளங்களை சீரமைக்கவும், கழிப்பறைகளை தினமும் சுத்தமாக பராமரிக்கவும், பள்ளி வளாகத்தில் விடுபட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை விரைந்து பொருத்தவும் அறிவுறுத்தினார்.
பாடம் நடத்திய கலெக்டர்
அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை நேரில் பார்வையிட்டார். பின்னர் 9-ம் வகுப்பிற்கு சென்று மாணவர்களுக்கு அறிவியல் பாடமும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடமும், பிளஸ்-2 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களையும் நடத்தினார்.
பின்னர் அந்த பாடப்பிரிவுகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு கலெக்டர் பதில் அளித்தார். மேலும் பள்ளியின் இயற்பியல், வேதியியல், கணினி ஆய்வகங்களை கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வகங்களுக்கு தேவையான உபகரணங்கள் விவரத்தை அளித்து, அவற்றை பெற்று கொள்ளும்படியும், ஆய்வக குடுவைகள் மற்றும் இதர ஆய்வக பொருட்களை பாதுகாப்பாக பராமரிக்கும் படியும், தண்ணீர் வசதிக்கு ஏற்ப குழாய்கள் அமைக்கவும், பழுதடைந்த குழாய்களை சீரமைக்கவும் மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.