கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
கோவை
கடைகளை காலி செய்ய கோரி நோட்டீஸ் வழங்கியதால் கலெக்டர் அலுவலகத்தை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், தலைமை பொருளாளர் அப்துல் சமது உள்ளிட்ட வியாபாரிகள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே கோவை மாநகராட்சியில் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம். இதில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர், கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆகையால் சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி மைதானத்தில் தற்காலிகமாக கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் மின்சாரம்,குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மேலும் எருக்கிடங்கு மைதானத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் நடைபெறாது. தற்போது கிடைக்கும் வருமானமும் இழக்கக்கூடும். எனவே இந்த விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்கே வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்
விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், கோவையில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன இந்த பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை காட்டிலும் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.
எனவே தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை அரசு உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.