டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாளையம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் கோட்ட கலால் அலுவலர் நூர்ஜஹான் மனுக்களை பெற்று கொண்டார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பாளையம் கிராமத்தில் இருந்து குரும்பலூருக்கு ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையினால் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பாளையத்தில் அதிக சாலை விபத்துகள் ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
காலி மதுபாட்டில்கள்
மது பிரியர்கள் மது போதையில் தன் நிலை மறந்து ஆடையின்றி காணப்படுவதால், அந்த வழியாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடிவதில்லை. குரும்பலூர் ஏரியிலும், அதன் மதகுகளிலும் காலி மது பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். மேலும் பாளையம் கிராமத்தில் ரேஷன் கடையில் இரவு நேரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
எனவே அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.