கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மழையின்றி கருகி காய்ந்து போன நெற்பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மழையின்றி கருகி காய்ந்து போன நெற்பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பருவமழையை நம்பி பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகிவிட்டன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் மற்றும் இழப்பீடு கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது ராமநாதபுரம் அருகே உள்ள வெண்ணத்தூர் கண்மாய் பாசன விவசாயிகள் சார்பில் ஏராளமான விவசாயிகள் கருகி காய்ந்து போன நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணத்தூர் கண்மாய் பாசனத்தின் கீழ் பயன்பெறும் வெண்ணத்தூர், சம்பை, மேட்டு கொல்லை, ஆண்டிச்சியேந்தல், பாப்பனேந்தல் உள்பட 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 550 ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தோம். வெண்ணத்தூர் கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த நிலையில் மழை இன்றி கண்மாய் வறண்டு விட்டது. இதனால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி காய்த்து போனது. விலைக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சினாலும் பயிர்கள் பிழைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கடன் வாங்கியும், வட்டிக்கு கடன் வாங்கியும் நெல்விவசாயம் செய்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறோம் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசின் நிவாரணம் மற்றும் பயிர்காப்பீடு முழுமையான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடந்து வருவதால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.