கலெக்டர் அலுவலக உணவகத்தில்பாம்பு புகுந்ததால் பரபரப்பு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் (கேண்டீன்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் வந்து தேனீர் அருந்துவதும், உணவு சாப்பிடுவதும் வழக்கம். நேற்று காலை பாம்பு ஒன்று உணவகத்திற்குள் திடீரென புகுந்தது. இதனால் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த நபர் ஒருவர் உணவகத்திற்குள் புகுந்த பாம்பை நைசாக உணவகத்தை விட்டு வெளியே துரத்தினார். பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்று மறைவான இடத்திற்குள் சென்றுவிட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்திற்குள் திடீரென பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.