திட்டக்குழு உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவர கலெக்டர் வேண்டுகோள்
திட்டக்குழு உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவர கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட திட்டக்குழுவின் உறுப்பினர்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட திட்டக்குழுவின் தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குழுவின் துணைத் தலைவரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்களான பாஸ்கர், மகாதேவி, முத்தமிழ்ச்செல்வி, டாக்டர் கருணாநிதி, மதியழகன், அருள்செல்வி, ஹரிபாஸ்கர், செல்வலட்சுமி ஆகியோர் குழுவின் தலைவர், துணைத் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். கூட்டத்தில் திட்டக்குழுவின் பணிகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், அரசின் சார்பில் ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், பெரம்பலூர் மாவட்டத்தில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் ஏதும் இருப்பின் அவற்றை இக்குழுவின் கவனத்திற்கு அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், 130 எக்டர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடுதல் என்பன போன்ற மக்கள் நலத்திட்டங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அழைத்து எடுத்துக்கூறி செயல்படுத்த வேண்டும், என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகராட்சி ஆணையர், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.