முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழக முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதன் முதலாக ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் ஜமுனாமரத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,
பாக்குமுடையனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், கோவிலானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பலாமரத்தூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பாக அரசு தேனீ பூங்காவில் நடைபெற்று வரும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 நாட்களுக்கு...
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், தமிழக முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 975 மணவர்கள் மற்றும் 912 மாணவிகள் என 1887 பேர் பயன் பெறுவார்கள்.
வாரத்தில் 5 நாட்களுக்கு உணவு பட்டியலின்படி காலை உணவு வழங்கப்படும். சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் காலை உணவு சமைக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன், ஜமுனாமரத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ஜீவாமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குனர் லாவண்யா, ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.