மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிமில் அகமது (வயது 35). உமராபாத் அருகிலுள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சான்றோர் குப்பம் அருகே சென்ற போது, தனியார் கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முஜிமில் அகமது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.