கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்; ஒருவர் கைது
சமூக வலைத்தளத்தில் கேலியாக பதிவிட்டதால் ஆத்திரம்:கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்; ஒருவர் கைது
நல்லூர்
சமூக வலைத்தளத்தில் கேலியாக பதிவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து மோதிக்கொண்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் திருப்பூரில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்ைத பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரிைய சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவர் பொம்மை படம் ஒன்றை பதிவிட்டு மற்ற மாணவர்களுக்கு அனுப்பி உள்ளார். இதை மாணவர்களும் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஜூனியர் மாணவர் ஒருவர் அந்த பொம்ைமயை கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சீனியர் மாணவருக்கும், ஜூனியர் மாணவருக்கும் இடையே கல்லூரி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கு ெதரிய வந்தது. அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.ஆனாலும் மாணவர்களுக்கு இடையேயான பிரச்சினை தீரவில்லை. மாறாக அவர்களுக்குள் அது கனந்து கொண்டிருந்தது.
பின்னர் அன்றைய தினம் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வருவதற்கு மாணவர்கள் காங்கயம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். மாணவர்கள் மோதிக்கொண்ட தகவல் வந்ததும் காங்கயம் போலீசார் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை விசாரணை செய்த போலீசார் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
தாக்குதல்
அதன்பின்னர் மாணவர்கள் காங்கயத்தில் இருந்து பஸ்சில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ் விஜயாபுரம் பகுதியில் வந்தது. அப்போது அந்த பஸ்சை 4 பேர் வழி மறித்து மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறங்க வைத்து சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் கிஷோரை (வயது 20) கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டதில் ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
----------
________________________________