கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
காரைக்குடி
அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும், சட்ட கல்லூரிகளுக்கு வழங்குவதை போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பின் சார்பில் கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிடக் கோரியும், மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என நேற்று சிவகங்கை பெண்கள் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மன்னர் கலை கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முதல் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் போராட்டம் நடத்த உள்ளனர்.