கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு
வெள்ளலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
வெள்ளலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நகை பறிப்பு
கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வாசு. இவருடைய மனைவி ஜெயாகவுரி(வயது 44). தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயாகவுரி சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
டிரைவர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயாகவுரி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த அருண்குமார்(25) என்பதும், கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.