கல்லூரி மாணவர் அடித்துக்கொலை; 6 பேர் கைது


கல்லூரி மாணவர் அடித்துக்கொலை; 6 பேர் கைது
x

டி.கல்லுப்பட்டி அருகே தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

லாரி டிரைவர்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது 28). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். தற்போது தீபாவளி என்பதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். தீபாவளியன்று பாண்டியராஜன், தனது நண்பர்களான சங்கிலி குமார், பாலகிருஷ்ணன், ராஜபாண்டி, ராஜதுரை ஆகியோருடன் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள எம்.புளியங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

அப்போது எம்.புளியங்குளத்தை சேர்ந்த வீரபாண்டி என்ற கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தை வைத்து பாண்டியராஜனின் இருசக்கர வாகனத்தை இடித்து உள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பாண்டியராஜன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து குச்சம்பட்டி அருகில் உள்ள முட்புதர் பகுதியில் உட்கார்ந்து மதுஅருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வெங்கடாசலபுரத்தை சேர்ந்த நண்பர் அருண்குமார்(22) என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.

அடித்துக்கொலை

அப்போது புளியங்குளத்தை சேர்ந்த கண்ணன், விஜயபிரபு, சோனை குமார், கார்த்திக், சோனைபாண்டி, முனீஸ்வரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து மதுஅருந்தி கொண்டிருந்த பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்களை உருட்டு கட்டையால் அடித்துள்ளனர். இதை அங்கிருந்த அருண்குமார் தட்டிக் கேட்டார். அப்போது அவரையும் உருட்டு கட்டையால் பின்னந்தலையில் தாக்கி உள்ளனர்.இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அருண்குமார் உடல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

6 பேர் கைது

இதுகுறித்து வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், விஜய பிரபு, சோனை குமார், கார்த்திக், சோனைபாண்டி, முனீஸ்வரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.

மேலும் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன், ராஜபாண்டி, சங்கிலிகுமார், பாலகிருஷ்ணன், அரவிந்த்குமார், ராஜதுரை, அருண்குமார் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கிராம மக்கள், பாதிக்கப்பட்ட அருண்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், மேலும் தங்கள் தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர்-டி.கல்லுப்பட்டி சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்ட அருண்குமார் மேலூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மேலும் ஸ்டூடியோ ஒன்றில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளிக்காக மேலூரில் இருந்து வெங்கடாசலபுரத்துக்கு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டார்.


Related Tags :
Next Story