காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்ேபாட்டு தற்கொலை
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர்:
காதல்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகன் நோவா வில்லியம்ஸ்(வயது 19). இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பள்ளியில் படித்த காலத்தில் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்கள் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர், கடந்த வாரம் காட்டூரில் உள்ள நோவா வில்லியம்சின் அக்காள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது இரு குடும்பத்தினரும், நோவா வில்லியம்சிடம், உங்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான வயதில்லை. அதனால் 2 ஆண்டு கழித்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதில் நோவா வில்லியம்சுக்கு உடன்பாடு இல்லாத நிலையில், பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லாமல், அந்த பெண்ணை பிரிந்து விடுவோமோ? என்று மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலை அவரது குடும்பத்தினர் பார்த்தபோது நோவா வில்லியம்ஸ் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நோவா வில்லியம்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நோவா வில்லியம்சின் அறையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
உருக்கம்
அதில், 'நீ என்னை பிரிந்து விடுவாய் என்று உன் மீது சந்தேகப்பட்டேன். ஆனால் அது உண்மை இல்லை. எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நீ இந்த கடிதத்தை படிக்கும்போது நான் இருக்க மாட்டேன். என் தம்பியும் இதுபோன்று காதலித்தால், அவனுக்காவது உண்மையான காதலை சேர்த்து வையுங்கள் என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.