பெற்றோரின் சண்டையால் விரக்தி: கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
பெற்றோரின் சண்டையால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குரோம்பேட்டை,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நியுகாலனியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் ஜனபிரியா(வயது 19). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடைய பெற்றோர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜனபிரியா மிகவும் வேதனை அடைந்து வந்தார். நேற்று காலையிலும் வழக்கம் போல் ஜனபிரியா கண் எதிரேயே அவரது பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதாக தெரிகிறது.
தீக்குளித்து தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த ஜனபிரியா, "உங்களால் நான் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எப்போதும் உங்களுக்குள் பிரச்சினையாகவே இருக்கிறது" என்று கூறிவிட்டு, திடீரென வீட்டில் இருந்த என்ஜின் ஆயிலை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜனபிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் சண்டையால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.