விறகு அடுப்பில் டீ வைத்தபோது தீக்காயம் அடைந்த கல்லூரி மாணவி சாவு
விறகு அடுப்பில் டீ வைத்தபோது தீக்காயம் அடைந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பூவம்பாடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் அபிநயா (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி தனது தந்தை தமிழ்ச்செல்வனுக்கு டீ வைப்பதற்காக தனது வீட்டில் விறகு அடுப்பை அபிநயா பற்ற வைத்துள்ளார். அப்போது விறகு அடுப்பின் அருகில் இருந்த மண்எண்ணெய் கேன் தவறி அபிநயா மீது விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விறகு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ அபிநயாவின் மீது பட்டு எரிந்்தது.
இதனால் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அபிநயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.