பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த போது, தவறி விழுந்த கல்லூரி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த போது, தவறி விழுந்த கல்லூரி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தடுமாறி விழுந்தனர்

கேரள மாநிலம் மறையூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (வயது 22). இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த ஆவின் அபிஷேக் (19) என்பவர் பி.சி.ஏ. படித்து வருகிறார். மதன்லால் உடுமலையில் தங்கி இருந்து கல்லூரிக்கு தினமும் வந்து சென்றார்.

இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் கோவையில் இருந்து பழனி நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ்சில் அதிகமாக கூட்டம் இருந்ததால் மதன்லால், ஆவின் அபிஷேக் ஆகியோர் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். திப்பம்பட்டியில் வளைவில் உள்ள தனியார் பள்ளி அருகில் பஸ் சென்ற போது, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மதன்லால் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

ஆவின் அபிஷேக் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் பழனி பெருமாள்புதூரை சேர்ந்த பஸ் டிரைவர் விஜயகுமார் (40), கூளநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்டக்டர் ரகுபதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் விதிமுறைகளை மீறி அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தனியார் கல்லூரி மாணவர் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story