தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 16 May 2023 3:15 AM IST (Updated: 16 May 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே குளித்து கொண்டிருந்த போது தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே குளித்து கொண்டிருந்த போது தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

நீரில் மூழ்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 44), விவசாயி. இவருடைய மனைவி ஹேமலதா (38). இவர்களது மகன் கார்த்திகேயன் (22). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் முடி வெட்டி விட்டு வருவதாக கூறி கல்லூரியில் இருந்து சிக்கலாம்பாளையம் வந்தார். பின்னர் அவர், அப்பகுதியில் தங்கியிருந்து அதே கல்லூரியில் படித்து வரும் நண்பர்களான ஜீவானந்தம், மாதவன், ஹரி, இளங்கோ உள்பட 8 பேருடன் வடபுதூர் பகுதியில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த கார்த்திகேயன் நீரில் மூழ்கினார்.

சாவில் சந்தேகம்

தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடினர். இரவு நேரமானதால் மீட்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் மீட்பு பணி நடந்தது. அப்போது நீரில் மூழ்கி இறந்த கார்த்திகேயன் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே திருப்பதி தனது மகனின் உடலில் காயங்கள் இருப்பதால், சாவில் சந்தேகம் உள்ளது. கார்த்திகேயனுக்கு நீச்சல் தெரியாது. எனவே, உடன் குளித்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக கார்த்திகேயன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


Next Story