அமில கேன் கீழே விழுந்து சிதறியதில் கல்லூரி மாணவி படுகாயம்
அமில கேன் கீழே விழுந்து சிதறியதில் கல்லூரி மாணவி படுகாயம்
திருவாரூர்:
திருவாரூரில் மினி பஸ்சில் கொண்டு வரப்பட்ட அமில கேன் கீழே தவறி விழுந்து சிதறியதில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மினி பஸ்
திருவாரூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து தினமும் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வடகரை பகுதிக்கு மினி பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் தினமும் ஏராளமான பொதுமக்கள், கல்லூரி-பள்ளி மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சில் வடகரையை சேர்ந்த அழகர்சாமி மகள் பிரியா (வயது 20) என்பவர் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பஸ் நிறுத்தத்தில், அந்த பகுதியை சேர்ந்த பழனி (48), குமார் (50) ஆகியோர் 5 லிட்டர் அமில கேனுடன் பஸ்சில் ஏறினர்.
கல்லூரி மாணவி படுகாயம்
திரு.வி.க. அரசு கல்லூரி அருகே வந்தபோது வேகத்தடையில் பஸ்சின் டயர் ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வைத்திருந்த கேன் கீழே விழுந்து அமிலம் சிதறியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பிரியாவின் காலில் அமிலம் பட்டது. இதில் படுகாயமடைந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் கைது
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் மினி பஸ்சை சிறைபிடித்ததோடு, அமில கேன் கொண்டு வந்த பழனி, குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கழிவறை சுத்தம் செய்வதற்காக அமிலம் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.