கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்
பண்ருட்டி அருகே, கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்ததில் மாணவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
பண்ருட்டி,
கடலூா் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினசரி இரவு முத்தாலம்மன், அங்காளம்மன், அய்யனார், முருகன் ஆகிய சாமிகள் சிறிய அளவிலான தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்று வருவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் 4 சாமிகளையும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சப்பரங்களில் வைத்து இழுத்து சென்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் வீதிஉலா முடிவடைந்து கோவிலுக்கு மீண்டும் சாமிகளை இழுத்து வந்தனர். வடக்கு தெரு பகுதியில் வந்தபோது, கடைசியாக வந்த முத்தாலம்மனின் மேலே வைத்திருந்த குடை எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது உராய்ந்ததாக தெரிகிறது.
மின்சாரம் பாய்ந்தது
இதில் மின்சாரம் பாய்ந்ததில் சப்பரத்தை இழுத்து வந்த மணிகண்டன் மகன் கோகுலகிருஷ்ணன்(வயது 17) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேல்முருகன் மகன் திருமுருகன், ஜானகிராமன் மகன் ராஜேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோகுலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் நேற்று கோவிலில் நடைபெற இருந்த செடல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.