டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி


டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி
x

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அண்ணனுடன் சென்ற போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவி பலியானார்.

புதுக்கோட்டை

அரசு கலைக்கல்லூரி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் மீனா சுந்தரி (வயது 22). இவர், தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் தனது கிராமத்திலிருந்து தஞ்சாவூர்- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காடவராயன்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்து கல்லூரிக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.

நேற்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரடிப்பட்டி கிராமத்திலிருந்து சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் முன்னால் சென்று கொண்டிருந்தது.

உடல் நசுங்கி மாணவி பலி

இந்த சாலை ஒரு வழிப்பாதையாக இருப்பதால் ஒரு வாகனம் வரும்போது மற்ற வாகனங்கள் முந்தி செல்வது கடினம். அப்படி குறுகலான பாதையில் டிராக்டரை முந்தி செல்ல கனகராஜ் முயன்ற போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது.

இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக் கொண்ட மீனாசுந்தரி மீது டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மீனா சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனகராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டதால் படுகாயத்துடன் உயிர்தப்பினார்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா சுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடைேய படுகாயமடைந்த கனகராஜ் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லூரிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story