கூடலூரில் கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் பலி-மற்றொருவர் படுகாயம்


கூடலூரில் கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் பலி-மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2023 1:15 AM IST (Updated: 5 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கல்லூரிக்கு சென்றனர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரை சேர்ந்தவர் சபரி. இவரது மகன் சஜீவ் (வயது 17). இதேபோல் காந்தி நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் ரவிக்குமார் (17). சஜீவும், ரவிக்குமாரும் கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்தனர்.

கல்லூரியில் சேர்ந்து சில தினங்களே ஆன நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் ஒரு மோட்டார் சைக்கிளில் சஜீவும், ரவிக்குமாரும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் கல்லூரியில் பாடங்களை படித்து விட்டு மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார். இந்த சமயத்தில் பரவலாக சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது.

மாணவர் பலி

தொடர்ந்து கூடலூர்- ஓவேலி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கெவிப்பாரா என்ற இடத்தில் எதிரே வந்த ஜீப் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு சஜீவ், ரவிக்குமார் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இதில் சஜீவ் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்த ரவிக்குமாரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து பலியான சஜீவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே மாணவன் உயிரிழந்த தகவலை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story