சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். அப்போது அந்கத வழியாக வந்த அமைச்சர் எ.வ.வேலு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். அப்போது அந்கத வழியாக வந்த அமைச்சர் எ.வ.வேலு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
கார் மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியில் சேலம்- வாணியம்பாடி நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு வழிப்பாதையாக சாலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பேரணாம்பட்டில் இருந்து ஏலகிரிமலைக்கு மோட்டார் சைக்கிளில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் இஸ்மாயில் (வயது 21), அஜ்மல் ஆகியோர் ஏளகிரிமலைக்கு மோட்டார்சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளனர்.
வேப்பம்பட்டு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
அப்போது திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வாணியம்பாடி நோக்கி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த வழியாக காரில் வந்தனர்.
விபத்தை பார்த்ததும் அமைச்சர் எ.வ.வேலு காரை நிறுத்தி விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் கல்லூரி மாணவர் இஸ்மாயில் வழியிலேயே இறந்துவிட்டார். அஜ்மல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.