வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டிக்கொலை மரக்காணம் அருகே பயங்கரம்


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற  கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டிக்கொலை  மரக்காணம் அருகே பயங்கரம்
x

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம்


மரக்காணம்,

திருவள்ளூர் மாவட்டம் படியநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் அபிஷேக் (வயது 23). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கானா பாடல் பாடுவதில் அபிஷேக் பிரபலமானவர்.

இந்த நிலையில் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அபிஷேக் பாதயாத்திரை புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் நடந்து சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கைப்பாணி என்ற இடத்தில் நேற்று காலை 9 மணியளவில் அபிஷேக் மற்றும் அவருடன் வந்தவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அபிஷேக்கை வழிமறித்தனர். இதைப்பார்த்து அவருடன் வந்தவர்கள் அலறி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

சரமாரி வெட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் கை, கால், தலை என உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு கீழே விழுந்தார். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

பிரதான சாலையில் வாலிபரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அபிஷேக்கை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அபிஷேக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

கொலையாளிகளை பிடிக்க கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அபிஷேக் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரது எதிரிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story