கல்லூரி மாணவர் கொலை வழக்கு: காதலி கிரீஷ்மாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


கல்லூரி மாணவர் கொலை வழக்கு: காதலி கிரீஷ்மாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
x

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

கல்லூரி மாணவர்

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (21). குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ஷாரோன்ராஜிக்கும், கிரீஷ்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. காதலிக்கும் போது இந்த காதல் ஜோடி உல்லாச வானில் சிறகடித்து பறந்தது. இதற்கிடையே கிரீஷ்மாவின் குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவருக்கும், கிரீஷ்மாவுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து கிரீஷ்மா, ஷாரோன்ராஜை கழற்றி விட முடிவெடுத்துள்ளார். அதே சமயத்தில் காதலித்த போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களால் வருங்கால திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம் என நினைத்த கிரீஷ்மா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதற்காக அவர் பல தடவை முயற்சி செய்துள்ளார். 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற முறையில் குளிர்பானத்தில் விஷ மாத்திரைகளை கலந்து கொடுத்த திட்டத்திலும் ஷாரோன்ராஜ் உயிர் தப்பினார். குளிர்பானம் கசக்கிறது என கூறி துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார்.

பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலை

ஆனால் இறுதியாக வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் மற்றும் மாத்திரைகளை கலந்து கொடுத்ததில் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கொஞ்சம், கொஞ்சமாக உடல்நிலை மோசமடைந்து பலியானார்.

முதலில் தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறி வந்த கிரீஷ்மா, ஷாரோன்ராஜின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு விசாரணை சூடுபிடித்தது. முதலில் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்ற குற்றம்சாட்டு எழுந்தது.

பின்னர் கிரீஷ்மாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும் தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல்குமாரும் சிக்கினர். இதனை தொடர்ந்து 3 பேரையும் கேரள போலீசார் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் குமரி மற்றும் கேரளாவை உலுக்கியது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதுதொடர்பான வழக்கின் விசாரணை நெய்யாற்றின்கரை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே கிரீஷ்மாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யும் முயற்சியில் ஆதாரங்கள், சாட்சியங்களை போலீசார் சேகரித்தனர்.

அதன்படி நேற்று குற்றப்பத்திரிகையை நெய்யாற்றின்கரை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

காதலன் ஷாரோன்ராஜை வித்தியாசமாக கொல்வது எப்படி? என கிரீஷ்மா கூகுளில் தேடிய விவரம் மற்றும் ஜூஸ் சேலஞ்ச் முறையில் கொல்ல தீட்டிய சதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை

இந்த வழக்கை முதலில் விசாரித்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சனுக்கு ரவுடிகளுடனான தொடர்பை தொடர்ந்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சில்பா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுல்பிகரின் நேரடி விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரீஷ்மாவிற்கு எதிராக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தீர்ப்பு வரும் வரை கிரீஷ்மாவிற்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஷாரோன் ராஜ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கோர்ட்டு விசாரணை தீவிரமடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.


Next Story