கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பணம், மோட்டார் சைக்கிள் பறிப்பு


கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பணம், மோட்டார் சைக்கிள் பறிப்பு
x

கோவை விமான நிலையத்துக்கு பின்புறத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பணம், மோட்டார் சைக்கிளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


கோவை விமான நிலையத்துக்கு பின்புறத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பணம், மோட்டார் சைக்கிளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்லூரி மாணவர்

கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நிகந்தன் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையில் உள்ள விமான நிலையத்தின் பின்புறத்தில் கடந்த 18-ந் தேதி மதியம் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மொபட்டில் வந்த 3 பேர் திடீரென்று நிகந்தனை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டியதுடன், பணம், செல்போனை கொடுக்கும்படி கூறினார்கள். அதை அவர் கொடுக்க மறுத்ததுடன், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மோட்டார் சைக்கிள் பறிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து நிகந்தனை கத்தியால் குத்தியதுடன், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவர்கள் நிகந்தனிடம் இருந்து செல்போன், பணம், வெள்ளி மோதிரம் மற்றும் கைசெயின் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிகந்தனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய அந்த 3 மர்ம ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 இடங்களில் தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை 3 பேர் கொண்ட கும்பல் பறித்துச்சென்றது. தற்போது விமான நிலையத்தின் பின்புறத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது.

எனவே இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளை கும்பலா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story