கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை
அணைக்கட்டு அருகே கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அடுத்த சின்ன ஊணை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கூழ் வார்த்தலுடன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
மாலையில் பக்தர்கள் கோவில் முன் பொங்கல் வைத்தனர். இரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தின்போது அதேபகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மேளதாளத்துடன் நடனமாடியபடி வந்தனர். இதில் அதே ஊரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23), நண்பர் தீபன் ஆகியோரும் வந்தனர்.
ஊர்வலத்தில் சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50) ஆகியோர் மேளம் அடித்து வந்ததாக தெரிகிறது.
அப்போது புருஷோத்தமன் (23) மற்றும் அவரது நண்பர் தீபன் ஆகியோர் அவர்கள் வீட்டு எதிரே மேளம் அடிக்கச் சொல்லி வெகுநேரமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக மேளம் அடித்தவர்களுக்கும் புருஷோத்தமன், தீபன் மற்றும் அவர்கள் நண்பர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்திக்குத்து
வாக்குவாதம் முற்ணுறியதில் இரு தரப்பினரும் கை கலப்பில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.
இதில் புருஷோத்தமன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது புருஷோத்தமன் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முனுசாமி மற்றும் சுமன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
சம்பவ இடத்துக்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்
கொலை செய்யப்பட்ட புருஷோத்தமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்தபோதுதான் மோதலில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.