இளம்பெண்ணை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்


இளம்பெண்ணை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து விட்டு பேச மறுத்த இளம்பெண்ணை கல்லூரி மாணவர் கத்தியால் குத்தினார்.

கோயம்புத்தூர்

காதலித்து விட்டு பேச மறுத்த இளம்பெண்ணை கல்லூரி மாணவர் கத்தியால் குத்தினார்.

கல்லூரி மாணவர்

கோவை குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு சுந்தராபுரத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அவர்கள் ஒருவரை, ஒருவர் காதலிக்க தொடங்கினர். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் அந்த பெண் காதலிப்பது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் தங்களின் மகளை கண்டித்தனர்.

பேச மறுத்ததால் ஆத்திரம்

இதனால் அந்த இளம்பெண், ஸ்ரீராமுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் ஸ்ரீராம் தன்னுடன் மீண்டும் பேசும்படி அந்த பெண்ணிடம் கேட்டு வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த இளம்பெண் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.


அப்போது அங்கு வந்த ஸ்ரீராம், அந்த இளம்பெண்ணிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் அந்த இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இது குறித்துபோலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story