ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச புகைப்படம்
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நான் மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். மகாதேவபுரத்தை சேர்ந்த கோபி (வயது 25) மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள மருந்துக்கடையில் பணிபுரிந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நானும் அங்கு பணிபுரிந்த போது எனக்கும், கோபிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் காதலித்து வந்தோம்.
கோபி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, அடிக்கடி வெளியே சுற்றும் போது தவறாக நடந்து கொண்டார். பின்னர் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இந்தநிலையில் பங்களா மேடு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு தன்னை அழைத்துச் சென்று கோபி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் ஆபாச புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வாலிபர் கைது
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு கேட்ட போது, கோபி வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், உனது ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டினார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட எனது ஆபாச புகைப்படத்தை, கல்லூரி தோழிகள் பார்த்து என்னிடம் கூறினர். இதுகுறித்து கோபியிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அடித்தார்.
மேலும் உனது ஆபாச புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன். இதை வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். எனவே, கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் கோபி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.