கல்லூரி மாணவ, மாணவிகள் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வாணியம்பாடியில் கல்லூரி மாணவ, மாணவிகளின் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியை வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களுக்கு விடுமுறவு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தில் வாணியம்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். முகமது இலியாஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு மது ஒழிப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டு கல்லூரி சாலை, நியூ டவுன் வழியாக பஸ் நிலையம் அடைந்தனர்.
ஊர்வலத்தில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.