"கரணம் தப்பினால் மரணம்" ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று 'செல்பி' எடுத்த கல்லூரி மாணவிகள்


கரணம் தப்பினால் மரணம் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவிகள்
x

செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

கோவை :

ஓடும் ரெயில்,ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது அவர்களுக்கு சாகசமாக தெரிகிறது. ஆனால் பிரச்சினை ஏற்படும் போதுதான் அவர்களின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இளம்பெண்களும் ஓடும் பஸ், ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டனர்.

சமீபத்தில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம் , காரமடை, மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

அதுபோன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரெயில் சென்றது. அந்த ரெயில் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள், திடீரென படிக்கட்டு பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஒற்றை கையில் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

கோவை -அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் மெதுவாகதான் செல்லும். இருந்தபோதிலும் ஒற்றை கையில் கம்பியை பிடித்துக்கொண்டு செல்பி என்ற பெயரில் சாகசம் செய்யும்போது, கை நழுவினால் என்ன ஆவது?

கரணம் தப்பினால் மரணம் என்பதை இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா?. எனவே அவர்கள் இனியாவது இதை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.


Next Story