கல்லூரிகளில் பி.காம். படிப்புகளுக்கு 'கிராக்கி'


கல்லூரிகளில் பி.காம். படிப்புகளுக்கு கிராக்கி
x

கல்லூரிகளில் பி.காம். படிப்புகளுக்கு ‘கிராக்கி' ஏற்பட்டுள்ளது.

திருச்சி

பிளஸ்-2 தேர்வு முடிவு

இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேரில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும். பாடப்பிரிவுகளின் தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரையில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 81.89 சதவீதமும், தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கிய பாடங்களை எடுத்துக்கொண்டால், இயற்பியலில் 97.76 சதவீதமும், வேதியியலில் 98.31 சதவீதமும், உயிரியலில் 98.47 சதவீதமும், கணிதத்தில் 98.88 சதவீதமும், தாவரவியலில் 98.04 சதவீதமும், விலங்கியலில் 97.77 சதவீதமும், கணினி அறிவியலில் 99.29 சதவீதமும், வணிகவியலில் 96.41 சதவீதமும், கணக்குப் பதிவியலில் 96.06 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல் தமிழில் 2 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3 ஆயிரத்து 909 பேரும், உயிரியலில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4 ஆயிரத்து 618 பேரும், வணிகவியலில் 5 ஆயிரத்து 678 பேரும், கணக்கு பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேரும், பொருளியலில் 1,760 பேரும், கணினி பயன்பாடுகளில் 4 ஆயிரத்து 51 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 1,334 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

கட்-ஆப் மதிப்பெண் இலக்கு உயர்வு

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும், 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்களின் விகிதமும் அதிகரித்து இருக்கிறது. 'பர்ஸ்ட் குரூப்' படிக்கும் மாணவர்களின் இலக்கு மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிப்பில் திரும்பி இருக்கிறது. 'தேர்டு குரூப்' படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரது இலக்கு பி.காம். படிப்புகளை நோக்கியே இருக்கும்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் கலைப்பிரிவு படிப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் இந்த அளப்பரிய மதிப்பெண்களையொட்டி, பெரும்பாலான கல்லூரிகள் தங்களது கட்-ஆப் இலக்கை உயர்த்தியும் இருக்கிறார்கள். இந்த ஆண்டு தேர்வு முடிவின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

முன்னணி கல்லூரிகளில் 'கிராக்கி'

திருச்சியில் உள்ள முன்னணி கலை கல்லூரிகள் பி.காம். படிப்புக்கான கட்-ஆப் இலக்காக 100 சதவீத மதிப்பெண்களை அறிவித்துள்ளனர். அதாவது வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம், பொருளியல் பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். பல கல்லூரிகள் 99.5 சதவீதம் என்றும், இன்னும் சில கல்லூரிகள் 99 சதவீதம் என்றும் தங்களது கட்-ஆப் இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள்.

இதனால் நல்ல மதிப்பெண்கள், குறிப்பாக கட்-ஆப்பில் நல்ல மதிப்பெண் சதவீதத்தை கொண்டவர்களுக்கு முதல் பட்டியலிலேயே இடங்கள் கிடைப்பது எளிதாகி இருக்கிறது. அதேவேளை இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 95 முதல் 98 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் இருந்தாலும் முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாகிவிட்டது. அவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பிரபல கல்லூரிகளில் பி.காம். படிப்புக்கு அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்னும் ஓரிரு நாளில் அங்கு யாருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிந்துவிடும். இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பி.காம். படிப்புகளுக்கும் கடும் 'கிராக்கி' ஏற்பட்டு இருக்கிறது.

போட்டா போட்டி

உதாரணத்துக்கு 100 இடங்கள் கொண்ட கல்லூரிக்கு, 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் முழுமையான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு முன்னுரிமையும், அதனைத்தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தவர்களுக்கு இடங்களும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 96 முதல் 98 சதவீதம் வரை வைத்திருந்த கல்லூரிகள் கூட, இந்த ஆண்டு 99 சதவீதமாக தங்களது கட்-ஆப்பை உயர்த்தி இருக்கிறார்கள்.

பி.காம் போல பி.சி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. இடங்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களும் உயர்ந்திருக்கிறது. இதனால் அந்த இடங்களுக்கும் 'போட்டா போட்டி' என்ற நிலையே நிலவுகிறது. இப்படி, இந்த ஆண்டு கலை பாட பிரிவுகளுக்கான இடங்கள் பெறுவதில் மாணவர்களுக்கு தவிப்பை உண்டாக்கி இருக்கிறது.


Next Story