மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கிராம உதவியாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் (25). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் சம்பந்தமாக நேற்று முன்தினம் வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். குடியாத்தம் அடுத்த காரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (46). கிராம உதவியாளர். இவரது மகன் சுசில் குமார் (16). இவர்களது உறவினர் மாதனூரை அடுத்த பட்டுவாம் பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி பெருமாள் (36). இவர்கள் 3 பேரும் மின்னூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஆம்பூரை அடுத்த மின்னூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது முகமது காசிம், அருண்குமார் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், சசிகுமார், சுனில் குமார், பெருமாள் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து பெருமாள் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சசிகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் இறந்துவிட்டனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.