மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2023 2:30 AM IST (Updated: 6 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தையல் தொழிலாளி

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் தாலுகா காரனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 30). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு பிரதிக்ஷா(5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சேகர் சிறுமுகை அடுத்த திம்மராயம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இதேபோல் லிங்காபுரம் பகுதியை சேர்ந்த பேன்சி கடை உரிமையாளர் நவீன் குமார் (30), சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (25) இருவரும் எதிேர மோட்டார் சைக்கிளில் வந்தனர். சிறுமுகை அருகே வெள்ளிக் குப்பம்பாளையம் பகுதியில் வந்த போது, திடீரென மோட்டார் சைக்கிள்கள் மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் சேகர், நவீன் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஹரிஹரன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பசாமி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் விபத்தில் காயமடைந்த ஹரிஹரனை கோவை அரசு மருத்துவமனைக்கும், கருப்பசாமியை சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த நவீன் குமாருக்கு நிஷா என்ற மனைவியும் சாயிதா (4) என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையே நவீன்குமாரின் தந்தை வெள்ளியங்கிரி மற்றும் உறவினர்கள் ஒரு தரப்பிடம் புகாரை பெற்று உள்ளதாகவும், வழக்கை மாற்றி எழுதி உள்ளதாகவும், எங்களிடமும் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி அதுவரை உடலை வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கூறியதன் பேரில், வெள்ளிங்கிரியும் புகார் அளித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story