மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டிட தொழிலாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பாட்னாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் காளிமுத்து (வயது 32). அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் பழனியப்பன் (28). இருவரும் திருச்சியில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இருவரும் பாட்னாப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டிடவேலைக்காக திருச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை காளிமுத்து ஓட்டி செல்ல பின்னால் பழனியப்பன் அமர்ந்து இருந்தார். அவர்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
இதனிடையே புதுக்கோட்டை சிப்காட் அருகே வெள்ளனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலாஜி (35) என்பவர் நாகமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது அண்ணன் கணேசன் மகள்களான 11-ம் வகுப்பு மாணவி முத்தழகி (16), 7-ம் வகுப்பு மாணவி கஸ்தூரி (12) ஆகியோரை அழைத்து கொண்டு பள்ளியில் விட மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர் காந்தி நகரிலிருந்து திருச்சி-மதுரை சாலையில் ஒரு வழி பாதையில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பாலாஜி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், காளிமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
2 பேர் பலி
இதில் 2 மோட்டார் சைக்கிளிலும் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் சாலையில் கிடந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலாஜி, காளிமுத்து ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி மாணவிகள் முத்தழகி, கஸ்தூரி மற்றும் பழனியப்பன் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.